சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் ஒரு கால்டாக்சி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து பயணி ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் அருகே அயனாவரம் பில்கிங்டன் சாலையில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் இறக்கி விட்டார்.

பின்னர் அங்கேயே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு காருக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ஆறுமுகத்தை தாக்கினர்.

பின்னர் காரை கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் கடத்தப்பட்ட காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அந்த கார் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்த புதுச்சேரி போலீசார் காரை மடக்கிப்பிடித்தனர். ஆனால் காரில் இருந்த 5 பேரில், 3 பேர் தப்பி ஓடி விட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர்.பிடிபட்ட 2 பேரையும் புதுச்சேரிக்கு வந்த ஐ.சி.எப். போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த செய்யது சிக்கந்தர், கோபிநாத் என்பதும், தப்பிச்சென்றவர்கள் இவர்களது நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். நண்பர்கள் 5 பேரும் கோவாவிற்கு உல்லாச பயணம் செல்ல ஆசைப்பட்டு காரை கடத்தியது தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.