பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல்!விரமாகப் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு

அடுத்த வருடம், பாஜக ஆளும் ஹரியாணா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தலுக்கு பின் இதில் தீவிரமாகப் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உருவான கட்சி ஆம் ஆத்மி. இது, இரண்டாவது முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்க, முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளார். இதன் முதலாவது வெற்றிக்குப் பின் அக்கட்சி 2014 மக்களவைத் தேர்தலில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் போட்டியிட்டது.

ஆனால், பஞ்சாபின் 3 தொகுதிகள் தவிர அக்கட்சியால் எங்குமே வெற்றி பெற முடியவில்லை. இதை அடுத்த கடந்த வருடம் முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் தீவிரமாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி 22 தொகுதிகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் அதன் அண்டை மாநிலமான ஹரியாணாவிலும் வரும் தேர்தலில் தீவிரமாகப் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

இதற்காக, ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால் தனது சொந்த ஊரான சிவானியில் தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 31-ல் தொடங்கி வைத்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவின் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான யோகேந்தர் யாதவ் உட்பட அனைத்து வேட்பாளர்களும் தம் வைப்புத்தொகையை இழந்தனர். எனினும், பஞ்சாபில் கிடைத்த வெற்றியால் கேஜ்ரிவாலுக்கு ஹரியாணாவிலும் இந்தமுறை நம்பிக்கை பிறந்துள்ளது.

இது குறித்து ஹரியாணா மாநில ஆம் ஆத்மி அமைப்பாளரான நவீன் ஜெய்ஹிந்த் கூறும்போது, ”சாதி மதக் கலவரங்கள், சமூக அடிப்படையிலான இடஒதுக்கீடு அல்லது சாதுக்களின் போராட்டங்கள் போன்றவற்றால் வெறுப்படைந்துள்ளனர். இதனால், ‘எனது சமூகம் இந்துஸ்தானி’ எனும் பெயரில் ஆம் ஆத்மி தம் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது. டெல்லியில் எங்கள் வளர்ச்சிப் பணிக்கு மோடி அரசு தடையாக உள்ளது. ஆனால், ஹரியாணாவில் அவ்வாறு எங்களை எவரும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதனிடையில், பாஜக ஆளும் ஹரியாணாவின் முதல்வர் மனோகர் லால் கட்டர், மே 2019-ல் வரும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால், 2019 அக்டோபரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுமே முன்கூட்டியே தயாராகி வருகின்றனர்.

இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக் தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாறி, மாறி ஆட்சி செய்து வந்தனர். தற்போது, லோக் தளத்தின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவருக்கு கிடைத்த தண்டனையால் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்தர்சிங் ஹுட்டா மீது பல்வேறு ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் இறங்கியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.