“தலா 2000 ரூபாய் வழங்கப்படும்” – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு..!

மாவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 2,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிரானது, மாவு பூச்சியின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.இதனால்,பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சட்டப் பேரவையில் முன்னதாக கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற தமிழக சட்ட பேரவையில், மாவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா 2000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று,தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது உரையில் கூறியதாவது:”மாவு பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 2,000 ரூபாய் இழப்பீடு என பாதிப்பு ஏற்பட்டுள்ள மொத்த நிலங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும்,நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.