டி20 தொடரை வெல்லப்போவது யார் …? இந்தியா vs ஆஸ்திரேலியா பலப்பரீட்சை….!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் ஐதராபாதில் இன்று மாலையில் நடைபெறுகிறது.
இந்தத் டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் ,இரண்டாவது  ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் என இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், 3-வது ஆட்டத்தில் வென்று யார்  தொடரைக் கைப்பற்றுவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது .
இரண்டாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.  எனவே இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஜோடி சிறப்பாக ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும் மிக முக்கியமாகவும்.
மிடில் ஆர்டரில் கோலி, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்கின்றனர். எனினும் கடந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. அதனால் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க முடியாமல் தோற்க நேரிட்டது.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா கூட்டணியே களமிறங்கும். அதனால் மூத்த வீரரான ஆசிஷ் நெஹ்ராவுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது.
இரண்டாவது ஆட்டத்தில் அபார வெற்றிக் கண்ட உற்சாகத்தில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா.இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்குமானால், ஆஸ்திரேலியா வலுவான ஸ்கோரை குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் டேவிட் வார்னரும், ஆரோன் ஃபிஞ்சும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மோசஸ் ஹென்ரிக்ஸ் – டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமாக ஆடி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தது.
எனவே, ஹென்ரிக்ஸ் – டிராவிஸ் ஹெட் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதுதவிர கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் பெய்ன் போன்றோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் நாதன் கோல்ட்டர் நீல், பெஹ்ரென்டார்ஃப் கூட்டணி கலக்கி வருகிறது. கடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கோலி, மணீஷ் பாண்டே ஆகிய 4 முன்னணி பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்திய பெஹ்ரென்டார்ஃப், இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா அணியின் விவரம்:
ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா அணியின் விவரம்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மோசஸ் ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்ட்டர் நீல், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment