2 குழந்தைகள் உயிரிழப்பு.. தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்..!

கோவையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 குழந்தைகள் இறந்ததால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதில் ஒரு குழந்தை நேற்று முன்தினம் மதியம் தூங்கி கொண்டிருக்கும்போது மயங்கியதால் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர்கள் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தடுப்பூசி போட்டால் தான் தங்கள் குழந்தை இறந்ததாக புகார் தெரிவித்தனர். பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், உயிரிழந்த குழந்தை நிமோனியா காய்ச்சலால் தான் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை சவுரி பாளையத்தை சேர்ந்த 2½ வயது குழந்தை தடுப்பூசி போட்டு கொண்ட பின் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவையில்  அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

2 குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகார் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த 2 முகாம்களிலும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம் என கூறினார்.

author avatar
murugan