அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்;நிச்சயம் நடவடிக்கை” – அமைச்சர் செந்தில்பாலாஜி ..!

அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போனதாக  அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது:

“தொடர்ந்து 100 நாட்களை கடந்து தொடர்மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.எனினும்,அதற்கு பிறகு துயரம் என்று சொல்வதா? அல்லது வருத்தம் அளிக்கும் செய்தி என்று சொல்வதா? என தெரியவில்லை. ஏனெனில்,நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது.அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும்,இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது.அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது.இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது.

இந்த சரிபார்க்க கூடிய பணிகளை இயக்குநர் உற்பத்தி,இயக்குநர் விநியோகம்,சிஎப்ஓ ஆகியோர் சேர்ந்து கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டதில்,2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும்.இது முதற்கட்ட ஆய்வு.

தொடர்ந்து,இன்னும் இந்த குழுக்கள் முழுவதும் ஆய்வு செய்து என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளன,எப்படி நிலக்கரி இருப்பில் வித்தியாசம் வருகிறது,என்ன தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறியும்.அதன் அடிப்படையில்,தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற முதல்வர் வழிகாட்டுதலின்படி,நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,தூத்துக்குடி,மேட்டூர் ஆகிய இடங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு அதன் உண்மை நிலவரங்கள் செய்தியாளர்களிடமும்,மக்களிடமும் தெரியப்படுத்தப்படும்”,என்று தெரிவித்தார்.