அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து 13 -ம் நாளாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 -ஐ கடந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,444 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 127 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் உயிரிழந்தோர் விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. இன்று உயிரிழந்த 127 பேரில், தனியார் மருத்துவமனையில் 44 பேரும், அரசு மருத்துவமனையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 115 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் கொரோனாவால் 1,708 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக, சென்னையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,434 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 339 பெரும், மதுரையில் 315 பேரும், திருவள்ளூரில் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,273 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,368 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.