கொரோனாவில் இறந்தவர்கள் உடலுக்கு 1 மணிநேர இறுதி சடங்கு – கேரள அரசு அனுமதி..!

கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு வீட்டில் வைத்து ஒரு மணிநேரம் இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,  கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளிலிருந்து மக்கள் பலவிதமான சங்கடங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் தற்போது 10 சதவீதமாக இருந்துவருகிறது. இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்த கேரள அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனாவின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்போடு 1 மணி நேரம் வீட்டில் வைத்து அவரவர் மதத்தின் அடிப்படையில் இறுதிச்சடங்கு நடத்த அனுமதியை வழங்கியுள்ளது.

மாநிலத்தில் முதல் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் அதனை தீவிர தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றால் கட்டுப்படுத்தி வருகிறோம். கேரளாவில் தொற்று பரவும் வீதத்தால் மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.