1 ஓவர் 43 ரன்…..புதிய சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்….!!

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உள்ளூர் ஏ பிரிவு போட்டியில் ஜோ கார்டர் மற்றும் ப்ரிட் ஹாம்ப்டன் ஆகிய வீரர்களால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுள்ளது.இதில் வடக்கு மாவட்டங்கள் அணிக்காக விளையாடிய ஜோ கார்டர், ப்ரிட் ஹாம்ப்டன் ஒரே ஓவரில் 43 ரன் விளாசியுள்ளனர். ஹாம்ப்டன் 23 ரன்களும், கார்டர் 18 ரன்களும் எடுத்தனர்.
மத்திய மாவட்டங்கள் அணி வீசிய 46வது ஓவரை ஹம்ப்டன் எதிர்கொண்டார். அந்த ஓவரில் முதல் பந்தினை பவுண்டரிக்கு அனுப்பினார். இரண்டாவது பந்தினை அவர் சிக்ஸர் விளாச, அது நோ பந்தாகவும் அம்பயரால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், அடுத்த பந்தும் நோபாலாக  வீசப்பட, அதனையும் ஹம்ப்டன் சிக்ஸர் பறக்க விட்டார். ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய அவர் 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி மூன்று பந்துகளை சந்தித்த கார்டர் மூன்றையும் சிக்ஸர்களாக பறக்க விட்டார். இரண்டு நோ பால்கள் உட்பட மொத்தம் 8 பந்துகள் அந்த ஓவரில் வீசப்பட்ட நிலையில், மொத்தம் 43 ரன்கள் எடுக்கப்பட்டது.
50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. ஹாம்ப்டன் 95 ரன்னில் ஆட்டமிழக்க, கார்டர் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் விளையாடிய மத்திய மாவட்டங்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.
ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் உள்ளிட்டோர் முதல் தரப் போட்டியில் ஒரே ஓவரில் 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசி இருக்கிறார்கள். அதேபோல், கிப்ஸ், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் சர்வதேச கிரிக்கெட்டில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்துள்ளனர். முதல் தரப் போட்டிகளில் வங்கதேசத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஒரே ஓவரில் 39 ரன் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், நியூசிலாந்து வீரர்கள் ஒரே ஓவரில் 43 ரன் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
dinasuvadu.com