ரெயிலில் குழந்தை பெற்ற நெல்லை பெண்….!!

ரெயிலில் குழந்தை பெற்ற நெல்லை பெண்….!!

எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லையை சேர்ந்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி சுவர்ணலதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கி தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லைக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் புறப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கையில் (இரவு 7.40 மணி) சுவர்ணலதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். இதனால் அவரது கணவர் செய்வதறியாது திகைத்தார்.இதையடுத்து உடன் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.இதுபற்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து உதவி மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். இரவு 7.55 மணிக்கு ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்தடைந்தது.இதையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் சுவர்ணலதா இருந்த ரெயில் பெட்டிக்கு விரைந்தனர்.

குழந்தை பிறக்க சில நொடிகளே இருந்த காரணத்தால், அந்த ரெயில் பெட்டியிலேயே சுவர்ணலதாவுக்கு பிரசவம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட உடனடி சிகிச்சை காரணமாக சில நிமிடங்களிலேயே சுவர்ணலதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர். பயணிகள் சிலர் தாங்கள் வைத்திருந்த இனிப்புகளை பிறருக்கு வழங்கினர்.அதனை தொடர்ந்து தாயையும், சேயையும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக ரெயில் பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் பயணிகள் அனைவரும் இசக்கி-சுவர்ணலதா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை கூறினர்.அப்போது, தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினருக்கு இசக்கி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சுவர்ணலதாவை ‘ஸ்டிரெச்சரில்’ வைத்து தூக்கி ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.சுவர்ணலதாவுக்கு பிரசவம் பார்த்ததன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *