யானைகள் அட்டகாசம்…திருப்பதி ஸ்ரீவாரி செல்லும் பாதை மூடல்..!

திருப்பதி-திருமலை அருகே நாராயணகிரி மலை உள்ளது. அங்கு, வெங்கடாஜலபதியின் பாதம் உள்ளது. அதனை பக்தர்கள், ‘‘ஸ்ரீவாரி பாதம்’’ என்கிறார்கள். திருமலைக்கு வரும் பக்தர்கள் நாராயணகிரி மலை உச்சிக்குச் சென்று வெங்கடாஜலபதியின் பாதத்தைத் தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நாராயணகிரி மலை அருகே தூர்தர்‌ஷன் டவர் பகுதியில் 5, 6 காட்டு யானைகள் கூட்டமாக வந்து, அப்பகுதியில் பிளிறிக் கொண்டு அட்டகாசம் செய்தன. ஸ்ரீவாரி பாதத்தை வழிபட வந்த பக்தர்கள், காட்டு யானைகளை பார்த்து அலறியடித்து ஓடினர். காட்டு யானைகள் அங்கேயே நின்றன.

இதுபற்றி பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் பனிக்குமார், பிரபாகர்ரெட்டி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காட்டு யானைகளை விரட்டினர்.

ஆனால், காட்டு யானைகள் மெதுவாக நகர்ந்து அம்மகுண்டா பகுதியை நோக்கி சென்றன. அங்குள்ள நீர்நிலையில் காட்டு யானைகள் குளித்து மகிழ்ந்தன. அங்கிருந்த சிறு மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்தன. தொடர்ந்து யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது.

இதனால் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் பாதுகாப்பை கருதி நாராயணகிரி மலைக்கு செல்லும் பாதையை மூடினர். நாராயணகிரி மலைக்கு பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனக் கேட்டு கொண்டனர்.

பக்தர்கள் அங்கு அனுமதிக்கப்படும் நேரமான மாலை 4 மணியில் இருந்து காலை 10 மணிவரை ஒரு வாரத்துக்கு நாராயணகிரி மலைக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு இருக்கும், அங்கு தரிசனமும் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டம் வந்தது இதுவே முதல் முறையாகும் என அதிகாரிகள் கூறினர்.

இதனால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயணகிரிமலை பகுதியில் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment