மோடி ஒரு பெரிய அனகோண்டா…ஆந்திர மாநில அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் என்று ஆந்திர மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப்புகாரை சுமத்தினர். இதுதொடர்பாக போட்டி விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடங்கியது. இவ்விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு அனைத்து அரசு நிறுவனங்களையும் செயலற்றதாக்குகிறது என குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி ஒரு அனகோண்டா என்று ஆந்திர மாநில நிதி மந்திரி யானமாலா ராமகிருஷ்ணடு விமர்சனம் செய்துள்ளார்.   தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் மோடியை விட பெரிய அனகோண்டா வேறு யாராக இருக்க முடியும்? அவரே அனைத்து அமைப்புகளையும் விழுங்கும் அனகோண்டா. சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை அவர் விழுங்கி வருகிறார்’’ என்று கூறியுள்ளார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியை தேளுடன் ஒப்பிட்டு, முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆந்திர மந்திரி கருத்தும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சி இவ்வாண்டு பா.ஜனதா தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment