மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 18 கிலோ கஞ்சா சிக்கியது..!

கேரள மாநிலம் ஆலபுழா பகுதிக்கு செல்லும் மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சேலம் ஜங்சன்ரெயில் நிலைய ஆர்.பி.எப்.போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஆர்.பி.எப்.போலீசார், மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக ஜங்சன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயிலில் இருந்து மர்மநபர்கள் யாராவது கஞ்சாவுடன் ஓடினால் அவர்களை பிடிக்க வேண்டி நடைமேடை மற்றும் நுழைவு வாயில், 5 பிளாட் பாரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

காலை சுமார் 8.15 மணிக்கு மும்பை தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்சன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து போலீசார் ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று 2 பைகள் கிடந்தன. இந்த பைகள் யாருடையது? என அக்கம், பக்கத்தல் இருந்தவர்களிடம் போலீசார் கேட்டனர். அவர்கள் தங்களுக்கு சொந்தமான பைகள் இல்லை. இது யாருடைய பைகள் என்றும் எங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கேட்பாரற்று கிடந்த 2 பைகளையும் திறந்து பார்த்தனர். அதில் 9 பார்சல்களில் 18 கிலோ கஞ்சா இருந்தது. ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் 18 கிலோ கஞ்சா இருந்தது. பின்னர் போலீசார் 18 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கஞ்சாவை கொண்டு வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க மும்பையில் இருந்து சேலம் வரையிலான ரெயில் நிலையங்களில் பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment