முதலாவது டெஸ்ட் டிரா : கோலியின் 50வது சதம்

இந்தியா – இலங்கை கிரிகெட் அணிகள் இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் மழையால் ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 122 ரன்கள் அதிகமாகும். அடுத்து 122 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாட தொடங்கியது.

பின் இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. லோகேஷ் ராகுல் 73 ரன்களுடனும் (113 பந்து, 8 பவுண்டரி), புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 49 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும், மேற்கொண்டு 6 ரன்கள் மட்டுமே அடித்த லோகேஷ் ராகுல் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் புகுந்த விராட் கோலி தொடக்கத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் புஜரா (22 ரன்கள்), ரகானே(0), ஜடேஜா(9) அஷ்வின்(7) சகா(5), புவனேஷ்குமார்(8) ஆகியோர் வரிசையாய் நடையை கட்டினாலும், விராட் கோலி, ஒருநாள் போட்டி போல அடித்து ஆடிக்கொண்டு இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம்  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அடித்த 18 வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தனது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அப்போது 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி 104 ரன்களுடன் முகம்மது சமி 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. இதையடுத்து பேட் செய்ய துவங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சில் நிலைகுலைந்தது. இதனால், டிரா ஆகும் என்று எதிர்பார்த்த இந்த போட்டி பரபரப்பான நிலையை எட்டியது. தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராடியது. சமி, மற்றும் புவனேஷ்குமார் துல்லிய தாக்குதலால் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.

இலங்கை பேட்ஸ்மேன்கள் வரிசையாய் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். ஆட்டம் பரபரப்பான கட்டத்தை போட்டி எட்டிய நிலையில், 26.3 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை இலங்கை அணி எடுத்து இருந்த போது, ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. நடந்து முடிந்த இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment