பெண் கொலை வழக்கை நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு!

பெண் கொலை வழக்கை நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு!

பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் அருகே உள்ள எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 48). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி அதிகாலை வீட்டில் தனியாக இருந்த லலிதா கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அவருடைய கணவர் இளையபெருமாளும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இந்தநிலையில், லலிதாவின் தாயார் வசந்தா, மூத்த மகன் அஜேஸ் மற்றும் உறவினர்கள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி இளங்கோவிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் லலிதாவின் தாயார் வசந்தா கூறியிருப்பதாவது:-

எனது மகள் லலிதா கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். இதுவரை கொலையாளிகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த சிலர்தான் எனது மகளை கொலை செய்துள்ளனர் என்று போலீசார் எங்களிடம் கூறினார்கள். அதுதொடர்பாக சிலரை கைதும் செய்தார்கள். ஆனால் மறுநாள் அவர்களை வெளியே விட்டுவிட்டனர். அதற்கான காரணம் புரியவில்லை. போலீஸ் மோப்ப நாய் ஒரு டீக்கடை வரை சென்றது. அதுதொடர்பாக போலீசார் யாரையும் அழைத்து விசாரிக்கவில்லை.

மேலும் எனது மகளின் வீட்டுக்குள் நுழைந்து தங்க நகைகள் சிலவற்றையும், ரூ.5 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். அதையும் திரும்ப ஒப்படைக்கவில்லை.

எனது மருமகன் 2-2-2018 அன்று தூக்கில் தொங்கியவாறு பிணமாக கிடந்தார். அவர் எதற்காக? எப்படி? இறந்தார் என்றும் தெரியவில்லை. எனவே எனது மகளின் இரண்டு மகன்களும் அனாதையாகி உள்ளனர். தினமும் அவர்கள் கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனவே தனிப்படை அமைத்து, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் மூலமாக எனது மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *