பெட்ரோல்,டீசல் விலை ஒரு பைசா குறைப்பு சின்னப்பிள்ள தனமா மோடிக்கு ராகுல்காந்தி கிண்டல்..!

பெட்ரோல், டீசல் விலையில் ஒரு காசு குறைத்துள்ளது மோடியின் சேட்டைத் தனமாக இருந்தால் அது அவரின் மோசமான ரசனையாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் காரணமாகக் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இம்மாதம் 14-ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், கடந்த 15-ம் தேதியில் இருந்து நாள் ஒன்றுக்குச் சராசரியாக லிட்டருக்கு 25 முதல் 30 காசுகள் வரை உயர்த்தி வந்தன.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பேரல் 80 டாலருக்கும் அதிகரித்துள்ளதால், வேறுவழியின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.30 காசுகளும் உயர்ந்தன. இந்நிலையில், 14 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாகக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகள் குறைத்து ரூ.77.83 ஆகவும், டீசல் லிட்டருக்கு 56 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.68.75 ஆகவும் அறிவித்தன. இதனால், வாகன ஓட்டிகள் ஓரளவுக்குப் பெருமூச்சு விட்டு நம்மதி அடைந்தனர்.

ஆனால், அடுத்த ஒருமணிநேரத்தில் அந்த விலைக் குறைப்பு தவறானது, கணக்கீடு செய்வதில் தவறு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த எண்ணெய் நிறுவனங்கள் அந்த விலைக் குறைப்பை வாபஸ் பெற்றன. அதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் இரண்டிலும் லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பிரதமர் மோடி, நீங்கள் பெட்ரோல், டீசல் விலையில் இன்று லிட்டருக்கு ஒரு காசு குறைத்துள்ளீர்கள். வெறும் ஒரு காசு மட்டும்தான். இந்த விலைக்குறைப்பு ஆலோசனை, சேட்டைத்தனம் உங்களுடையதாக இருந்தால், இது சிறுபிள்ளைத்தனம், மோசமான ரசனையாகும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நான் கடந்த வாரம் விடுத்த சவாலுக்கு நீங்கள் ஒரு காசு குறைத்துள்ளது சரியான பதில் அல்ல.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment