புதிய பாதையில் ஜி.வி.! நீட் தேர்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மொபைல் ஆப்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்,  நீட் தேர்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மாணவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி வருகிறார் .

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் 2016-17ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வியில் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் ஆக வேண்டுமென்ற தீராதா கனவு கொண்டிருந்தவர். அதுவரை மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக கல்வித் திட்டத்தில் 2017ல் மத்திய அரசின் நீட் தேர்வு முறை அறிமுகப் படுத்தப்பட்டது.

இதையடுத்து நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் வழக்கறிஞர் நளினி சிதம்பரம், நீட் தேர்வு முறையிலேயே தமிழக அரசு மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்தார். மேலும் அந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணை செய்ய வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதன்படி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நீட் தேர்வு முறையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வும் நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் மேல்நிலைக் கல்வி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வு முடிவால் மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு பறிபோனது. இதையடுத்து 2017 செப்டம்பர் மாதம் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் அனிதா.

அதன் பிறகு நீட் தேர்விற்கான எதிர்ப்புகள் தமிழகம் முழுவதும் வலுத்தது. நீட் தேர்வினால் ஸ்டேட் போர்டு பள்ளிகளில் ஊர்ப்புறங்களில் மருத்துவக் கனவுடன் படித்த மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் பட்டனர்.

இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, நீட் தொடர்பாக மூன்று மாதங்களாக வரைவுத்திட்டத்தைத் தயாரித்து, தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றைக் காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து இந்த Mobile App பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரபலங்கள் பலரும் எந்த பிரச்சனைக்கும் எந்த தீர்வும் கொண்டுவராமல் தெளிவற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெளிவாக ஒவ்வொரு பிரச்சனையையும் அணுகிவருவது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷின்  நீட் அப்ளிகேஷன் உருவாக்கத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு கிடைத்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment