”நாளை பேருந்துகளை உடைப்போம்” முதல்வர் முன்பு காட்டம்…!!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை (10.09.2018) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை. அதையொட்டி, புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்திருக்கிறது ஆளும் கட்சியான காங்கிரஸ். சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, “அரசுப் பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ நாளைக்கு எது ஓடினாலும் அதை உடைப்போம். ஆனால் எங்கள் மீது எந்த வழக்கும் போடக் கூடாது” என்று நிர்வாகிகள் கூச்சலிட்டனர். அதனால் சற்றுநேரம் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி  “பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி  அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமம் பாராமல் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார். இந்த போராட்டத்திற்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாளை ஆட்டோ, பேருந்துகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆட்டோ, பேருந்துகள் இயங்காது என்பதால் பெரும்பான தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment