நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை..!

நாகர்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி சாலையில் சிலர் இறைச்சி கடைகள் நடத்தி வருவதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மாடு மற்றும் பன்றி வெட்டப்பட்டு இறைச்சி விற்கப்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நகர்நல அலுவலர் கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதேவன் பிள்ளை, தியாகராஜன், சுரேஷ், ஜாண், ராஜா மற்றும் பணியாளர்கள் நேற்று நாகர்கோவிலில் சோதனை நடத்தினர். அப்போது பெதஸ்தா வணிக வளாகம் அருகே சாலையிலும், எம்.எஸ்.சாலை மற்றும் கே.பி.சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 3 இறைச்சி கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

மேலும் அந்த கடைகளில் இருந்த டேபிள் மற்றும் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்துக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அந்த கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மாடு மற்றும் பன்றி இறைச்சிகளையும் கைப்பற்றி நகராட்சி ஊழியர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

இதுகுறித்து, நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘நாகர்கோவில் நகராட்சி பகுதிக்குள் அனுமதியின்றி செயல்பட்டு வரும் அனைத்து கடைகளும் அகற்றப்படும். ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும்‘ எனக்கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment