நன்றி சொல்ல வேண்டியது நம்ம ஊர் சாமிக்குத்தான் – கமல்ஹாசனுக்கு தமிழிசை பதில்..!

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. பருவமழை தொடங்கிய நிலையிலே அணைகள் வேகமாக நிரம்பியது. இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.
கமல்ஹாசன் நன்றி
கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமியை அழைத்து கபிணி அணையை திறந்ததற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொண்டேன். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பின்னரும் கூட 2 மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவினால் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழிசை பதில்
இதற்கு பதில் தெரிவித்து பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு உள்ள பா.ஜனதா தலைவர் தமிழிசை, கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை, ஆண்டவன் (ரங்கநாதர்) கொண்டுவந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது. கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, நம்ம ஊர் சாமிக்குத்தான் என குறிப்பிட்டு உள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment