தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கண்டனம் தெரிவித்த சின்னத்திரை நடிகை கைது..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கண்டனம் தெரிவித்த சின்னத்திரை நடிகை கைது..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானி போலீஸ் உதவி கமிஷனர் உடையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் 27 நாட்கள் கழித்து ஊட்டியில் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருபவர் நிலானி. இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாள் அதைக் கண்டித்து வீடியோ காட்சி ஒன்றை கடந்த மே மாதம் 23-ம் தேதி வெளியிட்டார். அதில் ஷுட்டிங்கில் உதவி ஆணையர் உடை அணிந்தபடி நடிக்கும் காட்சி முடிந்தவுடன் அதே உடையில் வீடியோ காட்சியில் பேசியிருந்தார்.

அதைப் பார்க்கும் போது போலீஸ் அதிகாரி ஒருவர் தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்துப் பேசுவது போன்று இருந்ததாகப் புகார் எழுந்தது. தூத்துக்குடி சம்பவத்தைப் பற்றிப் பேசும் அவர் போலீஸ் யூனிஃபார்மை சுட்டிக்காட்டி இந்த உடையை அணிவதற்கே கூசுகிறது என்று பேசியிருந்தார்.

அவரது பேச்சு:

“இதைப் பார்க்கும் பொதுமக்கள் யாரோ எங்கேயோ செத்துப்போனார்கள் என்று நினைக்காமல் நமது வீட்டில் ஒருவர் இறந்து போனால் எப்படி இதுக்கு என்ன செய்யலாம், அடுத்து ஒரு போராட்டமோ, புரட்சியோ வெடித்தால் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கணும்.

அப்படி ஒரு பதிலடியை கொடுத்தே ஆகணும். இதற்கு நீங்கள் எல்லோரும் தயாராகுங்கள். கூடிய சீக்கிரம் இது நடக்கணும். இன்னொரு ஈழம் இனி இங்கே உருவாகக்கூடாது. நம்ம சொந்த பந்தத்தை 1.5 லட்சம் பேரை தூக்கிக் கொடுத்தோம்.

நிறைய ஷேர் பண்ணுங்க, விழிப்புணர்வை உண்டாக்குங்க. நம்மைத்  தீவிரவாதியாக ஆக்க முயற்சிக்கிறார்கள். யாரும் வெளிநாட்டுப் பொருளை வாங்காதீர்கள், யாரும் அரசுக்கு வரி கட்டாதீர்கள். இந்த அரசை சும்மா விட்டால் நாளை நாமும் பிணம் தான். அனைவரும் போராட வரவேண்டும்.

கூடிய சீக்கிரம் இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். புரட்சி வெடிக்க வேண்டும்.” என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி  அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

அவரது வீடியோ பேச்சு குறித்து ரிஷி என்பவர் புகாரின் பேரில் வடபழனி போலீஸார் சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 419 (ஆள் மாறாட்டம் செய்து அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றுவது), 153(வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 500 (அவதூறு உண்டாக்கும் வகையில் பேசுதல், பதிவிடுதல்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66d (ஆள் மாறாட்டம் மூலம் அல்லது வேறொரு நபராக நடித்து ஏமாற்றி அதை வலைதளங்களில் பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதையடுத்து நிலானி தன்னிலை விளக்கமாக மறுநாள் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார், அதில் ”நான் போலீஸ் அல்ல நான் ஒரு நடிகைதான். போலீஸ் உடையில் நடித்தபோது சம்பவத்தை கேள்விப்பட்டு அப்படியே பேசினேன்.

உங்கள் பேச்சு யூனிபார்ம் சர்வீஸை களங்கப்படுத்துவது போல் உள்ளது, நீங்கள் வன்முறையை தூண்டுவது போல் பேசி உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள். நான் அந்தப் பதிவை பயந்து போடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

நிலானி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கடந்த 26 நாட்களாக அவரைக் கைது செய்யவில்லை, தமிழகத்தில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக மாற்றுக்கருத்து சொல்பவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று நிலானியை போலீஸார் திடீரெனக் கைது செய்துள்ளனர்.

குன்னூரில் தங்கியிருந்த நடிகை நிலானியை வடபழனி போலீஸார் கைது செய்தனர், பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *