தூத்துக்குடியில் கொள்ளை போகும் ரேசன் கோதுமை!

கோதுமையை மூட்டையாக கட்டி தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் உள்ள ரேசன் கடையில் இருந்து எடுத்து வந்து பழைய இரும்புக்கடையில் பதுக்கி கடத்திச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது..!

ஆனால் அங்குள்ள கடத்தல்காரர்களுக்கு எளிதில் மூட்டை மூட்டையாக அரிசி மற்றும் கோதுமை கிடைக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்..! ரேசன் கடைகளில் கிலோவுக்கு 15 ரூபாய் கொடுத்து மொத்தமாக கடத்திவரப்படும் கோதுமையை அங்குள்ள பழைய இரும்புக்கடை ஒன்றில் இரவோடு இரவாக பதுக்கி வைத்துள்ளார் கடத்தல்காரர் ஒருவர். அந்த கோதுமையை சிறு சிறு மூட்டைகளாக கட்டிவைக்கிறார்.

பகல் நேரத்தில் சட்டை ஏதும் அணியாமல், தன்னை விவசாயி போல காட்டிக்கொண்டு, கோதுமை மூட்டைகளை சைக்கிளில் கடத்திச்சென்று 20 ரூபாய் வரை விலைவைத்து கடைகடையாக விற்பனை செய்வதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல வருடங்களாக மூட்டை மூட்டையாக அரிசி கடத்தி வந்த இவரை, ஒருமுறை கூட உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்யவில்லை என்பதால், தற்போது கோதுமை கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவர்களை போன்ற கடத்தல்காரர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அரசால் நியாயமான விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்டவர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment