தமிழகம் முழுவதும் போராட்டம் 100 சதவீதம் வெற்றி…!

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்க் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது’ என தெரிவித்தார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விவகாரம் தொடர்பாக, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், மத்திய அரசு, காலம் தாழ்த்தி வருகிறது; அதற்கு, தமிழக அரசும் துணை போகிறது.

எதிர்க் கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.இந்த போராட்டங்களால், தமிழகம் முழுவதும், 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இன்று மாலை நடக்க இருந்த, அனைத்து கட்சிக் கூட்டம், நாளை நடக்கும். எங்கள் போராட்டங்களால், பொது மக்களுக்கு, எந்தவித சிரமமும் ஏற்படாது; இது, கட்சி சார்பான போராட்டமல்ல. அமைதியாக, அறவழியில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்துள்ளது.இதற்கு பின்னும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து, அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து, முடிவெடுக்கப்படும். தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான், கவர்னர், தனி வழியில் சென்று, ஆய்வுகளை நடத்துகிறார். இந்த ஆட்சி மீது திருப்தி ஏற்பட்டிருந்தால், ஆய்வு நடத்த வேண்டிய அவசியமே, அவருக்கு வந்திருக்காது. முதல்வர், கவர்னரை சந்தித்து பேசியது, கபட நாடகம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.போராட்ட களத்தில் ஒரு மணக்கோலம்!சென்னையில், நேற்று நடந்த, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட, எதிர்கட்சி தலைவர்களை, போலீசார் கைது செய்து, புரசைவாக்கத்தில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர், பாரதிதாசன் – ஸ்ரீமதி ஆகியோரின் திருமணம், திருமாவளவன் தலைமையில் நடக்க இருந்தது. மறியல் காரணமாக, அவர் கைதாகி இருந்ததால், திருமண விழாவை நடத்தி வைக்க, திருமாவளவனால் செல்ல முடியவில்லை. இதையடுத்து, ஸ்டாலின், திருமாவளவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த, திருமண மண்டபத்திற்கே, மணக்கோலத்தில், மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். திருமணத்தை நடத்தி வைக்கும்படி, ஸ்டாலினிடம், திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, ஸ்டாலின், தாலி எடுத்துக் கொடுக்க, மணமகன் பாரதிதாசன், மணமகள் ஸ்ரீமதி கழுத்தில் கட்டினார். திருமணம் முடிந்ததும், மணமக்களுக்கு, ஸ்டாலின் பரிசு வழங்கினார். அங்கு கூடியிருந்த தலைவர்களும், தொண்டர்களும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment