ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மீது நீளும் விசாரணை

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மீது நீளும் விசாரணை

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவர்களது உறவினர்கள் பலரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அத்துறை சார்பில் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகனும், ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியுமான விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மைத்துனர்கள் கார்த்திகேயன், ராஜராஜன், டி.டி.வி.தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ், சகலை டாக்டர் சிவகுமார், கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) செயலாளர் புகழேந்தி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வி. பொதுமேலாளர் நடராஜன், ‘ஜாஸ் சினிமாஸ்’ நிறுவன நிர்வாகிகள் உள்பட பலரும் வருமான வரி அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடந்த 17-ந் தேதி விவேக்கின் சகோதரி ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் 2-வது முறையாக வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், பூங்குன்றன் அளித்த பதில்களின் அடிப்படையில்தான் அன்றைய தினம் இரவோடு இரவாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கு பூங்குன்றன் அறை, சசிகலாவின் 2 அறைகளில் என சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில் சில பென்டிரைவ்கள், லேப்டாப்கள், ஹார்டு-டிஸ்குகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் மூட்டைகளில் எடுத்துச் சென்றனர்.

கிடைத்த ஆவணங்களை கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆவணங்களின்படி, சசிகலாவுடன் தொடர்புடைய இன்னும் பலர் வருமான வரித்துறையினரின் வளையத்தில் சிக்குவார்கள் என தெரியவருகிறது. அவர்களுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சந்திரசேகர் விசாரணைக்கு வருமான வரி அலுவலகத்துக்கு வர இருப்பதாக தகவல் பரவியது. இதனால்  பத்திரிகையாளர்கள் அங்கு கூடினர். ஆனால், நேற்று மாலை வரை அவர் வருமான வரி அலுவலகத்துக்கு வரவேயில்லை.

தேவைபட்டால் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை விசாரனைக்கு வருமான வரித்துறையினர் அழைபார்கள் என தெரிகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *