சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் மறியல் போராட்டம்…!!

சத்துணவு ஊழியர்கள் அக்.29 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் மறியலில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் இரா.நூர்ஜஹான், பொருளாளர் பே.பேயத்தேவன், துணைத்தலைவர் சசிகலா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயாகவும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் தர வேண்டும், உணவு மானியத் தொகையை ஒரு மாணவருக்கு 5 ரூபாய் என தர வேண்டும், 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அக்.25 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
சத்துணவு அமைப்பாளர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இளநிலை உதவியாளருக்கு வழங்குவது போன்று குறைந்தபட்சம் 24 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியம் கேட்கிறோம். சட்டப்படி குறைந்தபட்சம் 7 ஆயிரத்து 850 ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும். ஆனால் 3 ஆயிரம் ரூபாய்தான் தருகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே உணவு வழங்கிவிட்டு போராட்டம் நடத்தி வந்தோம். அதற்கு மதிப்பளித்து, சங்கத் தலைவர்களை அழைத்துப்பேசி பிரச்சனையை தீர்க்காமல் மெத்தனமாக நடந்து கொள்கிறது. இத்தகைய சூழலில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் திங்கட்கிழமை (அக்.29) முதல் மையங்களை மூடிவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் காரணமாக 47ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படும். 56 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததால் வேறு வழியின்றி விருப்பம் இல்லாமல் இந்த போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment