கொள்ளையடித்த பணத்தை வைத்து கொடை வள்ளலாக வாழ்ந்து வந்த பலே திருடன்..!

கடந்த ஏப்ரல் மாதம் கூரியர் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ரூ.80 லட்சத்துடன் அங்கு வேலைபார்த்த ரமேஷ் என்பவர் தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் 20 நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள ஒரு கோவிலுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலுக்கு நன்கொடையை அள்ளி வழங்கினார். மேலும் பக்தர்களுக்கு ரூ.8 லட்சம் செலவில் உயர்தர உணவினை அன்னதானமாக வழங்கினார்.

இதேபோல கோவில் வளாகத்தில் இருந்த ஆதரவற்றவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தானமாக கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் அப்பகுதி மக்களுக்கு ‘கொடை வள்ளலாக’ காட்சி தந்தார்.

ஆனால் வாலிபர் மீது உள்ளூர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த தொடங்கினர். இந்தநிலையில் தான் மும்பை போலீசார் ரூ.80 லட்சம் கொள்ளை சம்பவம் குறித்து உ.பி. போலீசாரிடம் விசாரித்தனர். உ.பி. போலீசார் அந்த நேரத்தில் தங்கள் ஊருக்கு வந்துள்ள புதிய கொடை வள்ளல் குறித்து கூறியுள்ளனர். விசாரணையில், மும்பையில் கூரியர் நிறுவன உரிமையாளரிடம் கொள்ளையடித்தவர் தான் விருந்தாவன் கோவிலில் ரூ.8 லட்சத்திற்கு அன்னதானம் கொடுத்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார், உ.பி. போலீசார் உதவியுடன் ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான 5 ஐபோன்கள் மற்றும் 1¼ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்து செய்த பாவத்தை போக்க கோவில்களுக்கு சென்று தானம், தர்மம் செய்ததாக ரமேஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment