என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்.!பா.ஜ.க.வுக்கு ராகுல் சவால்..!

2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கொன்றனர் என கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், மகாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் கடந்த முறை ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘எங்களது போராட்டம் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவை. விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பிரதமர் பேசுவதே இல்லை. அவர்கள் (பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்) கொள்கைக்காக போராடும் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அவற்றை நாங்கள் போராடி வெல்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment