என்னை மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு உண்டு டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்பை வெற்றி பெறச்செய்வதற்கு ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒரு விசாரணை நடத்துகிறது. அதே நேரத்தில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழுவின் விசாரணையும் நடத்தப்படுகிறது. இந்த குழு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக முல்லர் குழுவினருக்கும், டிரம்ப் வக்கீல்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
டிரம்பிடம் விசாரணையின்போது கேட்பதற்காக கேள்விகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துள்ள டொனால்ட் டிரம்ப், பிரமாண வாக்குமூலம் அளித்து, விசாரணை குழுவினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவாகி உள்ளது.
இதற்கிடையே, ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவுடன் சேர்ந்துகொண்டு ஹிலாரியை வீழ்த்த டிரம்ப், முன்னர் திட்டமிட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் இந்த நாட்டு குடிமக்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் அதிகாரம் படைத்துள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு தனக்குத்தானே பொதுமன்னிப்ப்பு அளிக்கும் அதிகாரத்தையும் எங்கள் நாட்டு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ளது என ஆளும்கட்சியை சேர்ந்த சில வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நாட்டின் அதிபர் என்ற வகையில் என்னை மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு உண்டு என டொனால்ட் டிரம்ப் இன்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த தவறுமே செய்யாத நான் எதற்காக அதை செய்ய வேண்டும்? எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எப்படியாவது இந்த வழக்கில் தன்னை சிக்கவைக்க துடிக்கும் எதிர்க்கட்சியினரையும் அவர் விமர்சித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment