இன்று கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

உச்சநீதிமன்றத்தில்,கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கின் விசாரணை  இன்று காலை 10.30 மணிக்குத் தொடர உள்ளது.

உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் இதே போன்று உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்தியது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இரவு முழுக்க காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் வாதங்களை முன்வைத்தனர். எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. எடியூரப்பாவின் எதிர்காலம் அவர் ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அக்கடிதத்தில் 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே தெரிவிக்கப்பட்டிருப்பதால் எடியூரப்பா ஒருநாள் மட்டுமே முதலமைச்சர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. எடியூரப்பாவின் பதவி தப்புமா, அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படுமா என்பது இன்றைய விசாரணையில் முடிவாகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment