இந்திய அணியுடனான டி20 போட்டி-கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல் – இதுதான் காரணம்!

இந்திய அணியுடனான டி20 போட்டி-கேப்டன் கேன் வில்லியம்சன் திடீர் விலகல் – இதுதான் காரணம்!

இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி,முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது.இதனைத்தொடர்ந்து, 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இறுதியாக 18.5 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.அதுமட்டுமில்லாமல் முதல் முறையாக ஐசிசி டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியானது மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி,நவம்பர் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திலும், நவம்பர் 19 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்திலும், நவம்பர் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனிலும் மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூருக்கு வருகை தந்தது.

இந்நிலையில்,இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதனால்,நாளை நடைபெறும் டி20 தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்சன் திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Join our channel google news Youtube