இங்கிலாந்து ஆல் அவுட்..!! முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டம் குளோஸ்..

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்களில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்தது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் சமி பந்து வீச்சில் வெளியேற, மொயீன் அலி சாம் குர்ரானுடன் இணைந்தார். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய பந்து வீச்சாளர்களின் விக்கெட் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
அணியின் ஸ்கோர் 167 ஆக இருக்கும் போது மொயீன் அலி 40 ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். இதனிடையே சாம் குர்ரான் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கண்டார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக சாம் குர்ரான் 78 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முகமது சமி, அஸ்வின் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment