அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் 2011 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட போது ராஜேந்திர பாலாஜி வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களை விட, அவர் அமைச்சரான பின்பு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தமது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று பதில் கூறப்பட்டிருந்தது. வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 – 2013 காலகட்டத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், 1996ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்தில் அவர் துணை தலைவராக இருந்ததில் இருந்து கணக்கிட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

லஞ்ச ஒழிப்பு துறையின் பதில் மனுவில் முதற்கட்ட விசாரணை என்பது முறையாக இல்லை என்பதை உணர முடிவதாகவும், எனவே ராஜேந்திரபாலாஜியின் வருமானம், சொத்து மதிப்பு, செலவு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவல் கண்காணிப்பாளர் தகுதி கொண்ட ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு துறை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

விசாரணையின் நிலை தொடர்பான அறிக்கையாக அவ்வப்போது சமர்பிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *