“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”-முதல்வருக்கு பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு!

stalin

சேலம்:’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நேற்று சேலம் மாவட்டம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து,30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும்,ரூ.38,53,00,000 மதிப்பிலான 83 முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்தார்.புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.அதே சமயம்,ரூ.54,01,00,000 மதிப்பிலான 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கள் நாட்டினார்.

இதனையடுத்து,பேசிய முதல்வர்:”நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்ற தலைப்பிட்டு வந்த தீர்மானம், அதுதான் நீதிக்கட்சியானது, திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றதும் இந்த சேலம் மாநகரில்தான். இதையெல்லாம் தாண்டி இன்னொரு மகத்தான பெருமையும் இந்த சேலத்திற்கு உண்டு.

தமிழினத் தலைவர், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சில ஆண்டு காலம் வாழ்ந்த ஊர்தான் இந்த சேலம். 1949-50ஆம் ஆண்டுகளில் அந்த காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் நான் என்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன், அதுதான் எனக்குப் பெருமை.

சேலத்தில்,பெரியார் பல்கலைக்கழகம்,அரசு மகளிர் கலைக் கல்லூரி,ஆத்தூரில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,சேலம் மாநகராட்சிக்காக 283 கோடி ரூபாயில் காவிரி தனி கூட்டுக் குடிநீர் திட்டம்,சேலம் மாநகரத்துக்கு 183 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் சேலம் திருமணி முத்தாறு வெள்ளக்குட்டை ஓடை தூய்மைப்படுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு,சேலத்தில் 136 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சிதான் கடந்த காலங்களில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது நடைபெற்றிருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

இப்போது எங்கு சென்றாலும், எந்த வழியாகச் சென்றாலும், முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எங்கு சென்றாலும் மக்கள் எங்களுக்கு மகிழ்ச்சியோடு வரவேற்பு தருகிறார்கள். அவர்கள் முகத்தைப் பார்க்கும்போது, அவர்கள் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, அவர்கள் புன்னகையைப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு தெம்பு வருகிறது.

ஏற்கனவே ஒரு ஆட்சி நடந்தது, நான் அரசியலை அதிகம் பேச விரும்பவில்லை, பேசவும் தேவை இல்லை, அது எனக்கு அவசியமும் கிடையாது. எப்போது ஆட்சிக்கு வந்தோமோ, எப்போது நாம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறோம். பெரும்பான்மையாக வெற்றி பெற்றுவிட்டோம்.

இன்றைக்கு மட்டும் 261.39 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 38.52 கோடி ரூபாய் மதிப்பிலான 83 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசுத் துறைகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைக்கு மட்டும் 1,242 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு நான் அறிவிக்கப் போகிறேன். அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதன்படி,சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் 530 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.சுமார் 520 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாளச் சாக்கடைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சில நாட்களுக்கு முன்னால் வறுமை குறைவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டியது.

பேரறிஞர் அண்ணாவும், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றப்பட்ட சமூகநலத் திட்டங்கள்தான் இதற்குக் காரணம். இது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் அந்தப் புள்ளிவிவரம் எனக்கு முழு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றுதான் நான் சொல்ல வேண்டும்.

வறுமையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பசி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வறுமையே இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. அத்தகைய சூழலை உருவாக்கத்தான் இந்த அரசு முழு முயற்சியோடு களத்தில் இறங்கி இருக்கிறது.

இன்னும் ஐந்தாண்டு காலத்திற்குள் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதலிடம் என்கிற இலக்கை எட்டும், அதுதான் என்னுடைய இலக்கு. அதற்காகத்தான் நான் நாள் பார்க்கவில்லை, நேரம் பார்க்கவில்லை, உழைத்துக் கொண்டே இருக்கிறேன்.

கலைஞர் அவர்கள் என்னைப்பற்றி அடிக்கடி சொல்கிறபோது, அவர் பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார், ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று. அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நான் நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசும்போது,’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அணைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.

அதே போல்,மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேசும்போது,கடந்த கால முதல்வர்களை விட, மிக எளிமையான முதல்வராக தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்”,என்று கூறினார்.