தலீபான்களுடன் பேச்சு நடத்தும் இந்தியா…!!

ஆப்கன் தலீபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷியா ஏற்பாட்டின்பேரில் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளவுள்ளது.ரஷியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி இந்த பேச்சுவார்த்தைக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் நாடு திடீரென விலகியதால், அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை
இதைத் தொடர்ந்து, மாஸ்கோவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ரஷியா தற்போது 2-ஆவது முறையாக ஏற்பாடு செய்துள்ளது. இதில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுதவிர, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்,  ”பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி, சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது” என்றார்.அண்மையில் டெல்லிக்கு  வந்த ரஷ்ய அதிபர் புதின்- நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு இந்தியா ஒத்துழைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது.
dinasuvadu.com