உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் பொதுவிடுமுறை அறிவித்தது கேரளா.
கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (வயது 79) உடல்நல குறைவால் இன்று அதிகாலை பெங்களூருவில் காலமானார். கடந்த சில மாதங்களாக உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உம்மன் சாண்டி மறைவை அடுத்து, அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி சுமார் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 4 முறை மாநில அமைச்சராக, 2006 – 2011ல் ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராக, 2004 – 2006 மற்றும் 2011 – 2016ல் 2 முறை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன், தொண்டை புற்றுநோய் காரணமாக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றிருந்தார்.
அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார். இவரது உடல் தற்போது பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் பொதுவிடுமுறை அறிவித்தது கேரள மாநில அரசு. மேலும் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.