இலங்கையில் இஸ்லாமியருக்கு இந்து விவகாரத்துறை அமைச்சர் பதவி.!இந்துக்கள் அதிருப்தி..!

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டணி ஆட்சியில் நேற்று 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. 2 கேபினட் அமைச்சர்கள், 5 துணை அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து விவகாரத்துறை துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தன. இதனால் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி அமோக வெற்றி பெற்றது.

ரணிலுக்கு எதிராக வாக்கு

இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சவின் எஸ்எல்பிபி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவால் பிரதமர் ரணில் வெற்றி பெற்றார். ஆனால் வாக்கெடுப்பின்போது அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திர கட்சியைச் சேர்ந்த 6 கேபினட் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்தனர்.

தனது அமைச்சர்கள் தொடர்பில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா கட்டுப்பாட்டை இழந்து வருகிறார் என சுதந்திர கட்சியினர் நேரடியாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சரவையில் அதிபர் மைத்ரிபால அவ்வப்போது மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், இலங்கை தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலையில் புதிதாக 2 கேபினட் அமைச்சர்கள், 5 துணை அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர்.

பதவி ஏற்றுக்கொண்ட 7 அமைச்சர்களில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தானுக்கு இந்து விவகாரத்துறை துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு இந்துகூட இல்லையா?

இது குறித்து பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காதர் மஸ்தானும் நானும் நண்பர்கள். ஆனால், இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து விவகாரத்துறை தொடர்பான அமைச்சகப் பொறுப்பினை வழங்கினால் இந்துக்களின் பிரச்சினைகளை எவ்வாறு அவரால் அணுக முடியும்?

இந்த அமைச்சகப் பதவியை வழங்க நாட்டில் ஒரு இந்துகூட இல்லையா? இத்தகைய செயல்பாடு இந்துக்களைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது.

இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்றார்.