உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது – தினகரன்

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமமுக  பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.கடந்த சில நாட்களாக விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல் கொள்முதல் தொடர்பாக விடுத்து வரும் கோரிக்கைகளை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், உண்மை நிலவரத்தை மறைத்து பேட்டி கொடுப்பதில் மட்டுமே உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது.

இதற்கு மேலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் நெல் கொள்முதலை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதலமைச்சரின் மெத்தனத்தால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.