டிரம்பின் சர்ச்சை கருத்தை ஏன் நீக்கவில்லை? அதிருப்தியில் பேஸ்புக் ஊழியர்கள்!

டிரம்பின் சர்ச்சை கருத்தை நீக்காத பேஸ்புக் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பேஸ்புக் நிறுவனம், இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து  கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. இதனை கண்டித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இந்த பதிவு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பதிவு, ட்விட்டர் வரைமுறைக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியது. ஆனால், பேஸ்புக் அதனை நீக்கவில்லை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அதிருப்தி அடைந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேஸ்புக் “டிரம்பின் கருத்து அரசியல் அறிவிப்பாக பார்க்கப்பட்டதாகவும், அதனால்தான் அதனை நீக்கவில்லை” என விளக்கமளித்துள்ளது.