நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி

 நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் முடிவதற்குள் தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநர் குமரேசனை  உதவி காவல் ஆய்வாளர்கள் இருவர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .இந்த விவகாரத்தில்  உதவி காவல் ஆய்வாளர்கள்  சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும் பதியப்பட்ட இந்த வழக்கில் அதாவது FIR-ல் சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் தான் காலர்கள் மீது எப்.ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஆட்டோ ஒட்டுநரின்  உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் நான்காவது மரணம்! நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதலமைச்சர் பழனிசாமி என்ன செய்துகொண்டு இருக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.