மாநிலங்களவையில் கெத்து காட்டிய வைகோ ! இந்திக்கு எதிராக முழக்கம்

மாநிலங்கவையில் நேற்று முன்தினம் மருத்துவ ஆணையம் மசோதா  தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் ஒரு சில மாநில எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள்.இவர்களின் பேசியதற்கு  பின்னர் மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் பேசினார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார்.அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று  எழுந்து பேசிய மதிமுக எம்.பி.வைகோ,இது மருத்துவம் தொடர்பான விவாதம் ,எனவே நீங்கள் ஆங்கில மொழியில் தான் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஹிந்தியில் பேசினால் நுணுக்கமான சில வார்த்தைகள் புரியாது என்றும் தெரிவித்தார்.

வைகோவின் இந்த பேச்சுக்கு ஒரு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்தியில் தான் பேச வேண்டும் என்று முழக்கமிட்டனர்.இதற்கு உடனே பதில் அளித்து   பேசிய வைகோ,உங்களுக்கு இந்தியா வேண்டுமா?இல்லை இந்தி வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் உங்களின் இந்த இந்தி வெறி இந்தியாவை உடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.இதற்கும் ஒரு சில   எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.வைகோவும் ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் என்று முழக்கமிட்டார்.இதனையடுத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம் என்று தெரிவித்தார்.