வடை ரூ.10, டீ ரூ.28.! தேர்தலில் தோற்கடித்த வாக்காளர்களுக்கு விரக்தியில் போஸ்டர் அடித்து ஒட்டிய வேட்பாளர்.!

  • ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார்.
  • இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அதை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். மேலும், அந்த போஸ்ட்டரை அவரது ஊராட்சி மக்களுக்கும் வழங்கியும் உள்ளார். அவரின் இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் உள்ள அறிக்கையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக செலவு செய்ததாக குறிப்பிட்டு, அதில் வீட்டுவரி ரூ.44, பிரமாண பத்திரம் செலவு ரூ.500, வேட்புமனுத் தாக்கல் கட்டணம் ரூ.300, நோட்டீஸ் செலவு ரூ.10,200, போஸ்டர் ஓட்டுவதற்கு மைதா மாவு வாங்கியது ரூ.200, கோயில் வழிபாட்டுக்கான பூஜை பொருட்கள் வாங்கியதில் ரூ.300, அர்ச்சனை சீட்டு ரூ.5, உண்டியல் காணிக்கை ரூ.11, வாக்கு சேகரிக்கும் போது இருவருக்கும் வடை வாங்கி கொடுத்தது ரூ.10, கூல்ட்ரிங்ஸ் குடித்தது ரூ.28, போன்ற உட்பட மொத்தம் செலவுத் தொகை ரூ.18,481 என அந்த போஸ்டரில் பட்டியலிட்டுள்ளார். மேலும் என்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றியும், அன்பும் என அதில் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து துரை குணா பேசுகையில், வாக்காளர்கள் பணத்திற்கு விலை போய்விடக் கூடாது, அப்படி போனால் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையே எனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வாக்கு சேகரித்தேன். எனினும் மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, அரசுக்கு நாம் செய்த செலவு விவரங்களை அறிக்கையாக அச்சிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டியதோடு, ஊர் மக்களிடம் கொடுத்துள்ளளேன், மற்ற வேட்பாளர்களை போல் என்னையும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்