புதிய களத்தில் களம் இறங்கும் உசேன் போல்ட் !

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யாராலும் அசைத்துப்பார்க்க முடியாத வீரராக விளங்கிய உசைன் போல்ட், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளின் போது காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள 31 வயதான உசைன் போல்ட், தடகள போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டதால் அது தொடர்பான பயிற்சியாளர் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் கால்பந்து வீரராக விரும்புவதாகவும் அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற போர்சியா டார்ட்மெண்ட் கால்பந்து அணியில் விளையாடவுள்ள முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடுவதே தனது கனவு எனத் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் போர்சியா டார்ட்மெண்ட் அணிக்காக உசைன் போல்ட் களமிறங்குகிறார். தான் நன்றாக விளையாடுவதாக டார்ட்மெண்ட் அணியினர் கூறினால், மான்செஸ்டர் அணியில் இணைவதற்காக கடினமாக உழைக்க உள்ளதாக உசைன் போல்ட் கூறியுள்ளார்.
தடகள வீரனாக தான் ஒருபோதும் பதற்றமாக உணர்ந்ததில்லை என்றாலும் தற்போது புதிய விளையாட்டில் ஈடுபட உள்ளதால் பதற்றத்துடன் உணர்வதாகவும் கூறினார்.
source: dinasuvadu.com

Leave a Comment