இன்று வருகிறார் அமெரிக்க அதிபர்.! வரலாறு காணாத பாதுகாப்பு.!

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள். அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காரில் செல்லும் டிரம்புக்கு வழிநெடுக லட்சகணக்கான மக்களும், கலைஞர்களும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் மைதானத்துக்கு செல்லும் டிரம்பும், மோடியும் அங்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களிடையே உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு டெல்லி புறப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு இரவு வந்தடையும் டிரம்ப் உள்ளிட்டோர் சானக்கியாபுரி மெளரியா ஹோட்டலில் தங்குகின்றனர். பின்னர் மறுநாள் காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிரம்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று டிரம்ப் மரியாதை செலுத்த உள்ளனர். இது முடிந்ததும் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையும், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் டிரம்ப், இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொண்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். டிரம்ப் வருகையையொட்டி, அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே  பாகுபலி படத்தில் சண்டை காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை ட்ரம்ப் ரிட்வீட் செய்து, இந்தியாவில் தனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்