தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் இன்றைய நிலை என்ன???

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டமான “ஹைட்ரோ கார்பன் திட்டம்” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அதற்கான எதிர்ப்பு அலைகள் பல பக்கங்களிலிருந்தும் கிளம்பின. குறிப்பாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தை மாணவர்கள் கையில் எடுத்தது போல, நெடுவாசல் திட்டத்தையும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பிற்கு உறுதுணையாக நின்றனர்.

அதன் பிறகு கடந்த வருடம் அக்டோபர் மாதம், இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கான அறிக்கையும் அதனை செயல்படுத்த இருக்கும் தனியார் நிறுவனத்தின் பெயர்களையும் வெளியிட்டது மத்திய அரசு.

தமிழகத்தில் மூன்று இடங்களில்…

அந்த அறிக்கையில் மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்திருந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளிலும் என மொத்தம் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது மத்திய அரசு.

நெடுவாசலில் தற்போதைய நிலை..

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் துவங்கிய பொழுது பல பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு குரல் வழுத்ததால் அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.

அப்படியிருக்க, மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பது மக்களின் வாழ்வாதாரத்தையும், மேம்பாட்டிற்கான செயல் திட்டங்களையும் பற்றி சிந்திக்காத அரசாக இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

டெல்டா மாவட்டங்களில் போராட்டம்

கடந்த அக்டோபர் மாதம் இரண்டு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்தது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியிலிருந்து நாகை மாவட்டம் கரியப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க விவேகானந்தர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். குறிப்பாக விவசாயிகள் ஒரு வார காலமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது நான்காவது நாளிலிருந்து வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தின் முக்கிய நோக்கம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்ய வேண்டும் மற்றும் இப்பகுதிகளை வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். இப்போராட்டத்தில் தற்பொழுது பெண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் வரவிருப்பதால் ஆளும் அதிமுக அரசு இதில் தலையிட்டு தக்க தீர்வைக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லையெனில் இதற்கான விளைவு வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் தெரிய வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

author avatar
Vignesh

Leave a Comment