நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி ‘திருகாணி’.! அரசு மருத்துவர்களுக்கு சவால்..பின்னர் நடந்தது என்ன.?

  • புதுக்கோட்டை மாவட்டம் புஷ்பம் என்பவருக்கு திடீரென, இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  • பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் திருகாணி இருப்பதை கண்டறிந்து, பிறகு அதை லாவகமாக முறையில் அகற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி புஷ்பம். கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்கு வெளியில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென, தொடர்ந்து இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் ஏதோ ஒரு சிறிய பொருள் அடைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.

அதை தொடர்ந்து உடனே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அது மூக்குத்தியில் இருக்கும் திருகாணி என்பதும், இதனால் தான் நுரையீரல் சரிவர வேலை செய்யாமல் சுருங்கி இருப்பதும் தெரியவந்தது. திருகாணியை அக நோக்கி வழியே சிறிய இடுக்கி போன்ற ஒரு கருவியை மூச்சுக்குழாய்க்குள் செலுத்தி ஆணியின் நுனிப்பகுதியை இருகப் பிடித்து அகற்றினர். திருகாணியை எடுத்ததற்குப் பிறகு நோயாளி நலமுடன் இருக்கிறார்.

இதுபற்றி மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், பொதுவாக இதுபோன்ற உலோகப்பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் உள்ளே சென்று அடைக்கும்போது உடனடியாக இருமலும், தும்மலும் வரும் இதன்மூலம் உள்ளே உலோகப்பொருள் இருப்பது கண்டறியப்படும். ஆனால், இவருக்கு திருகாணி மட்டும் கழன்று வலதுபக்க நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டிருந்துள்ளது. மூக்குத்தி வெளியில் கழன்று விழுந்ததால், திருகாணி உள்ளே சென்றது அவருக்குத் தெரியவில்லை.

மேலும்  திருகாணியை அகற்றாமல் விட்டால், மூச்சுக்குழாய் பகுதி சீல் பிடித்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் இருந்தது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலும் மார்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். ஆனால், புஷ்பாவுக்கு மூச்சுக்குழாய் வழியாக உணர்வை அகற்றி மருந்தைச் செலுத்தி திருகாணியை அகற்றிவிட்டோம். நோயாளி தற்போது நலமுடன் இருக்கிறார். இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2 லட்ச ரூபாய்க்கு அதிகமாகத் தான்  இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்