கடலோர காவல் படையின் அணிவகுப்பை வழிநடத்தும் தமிழகத்தின் முதல் பெண்.!

  • நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
  • தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா முதல் முறையாக கடலோர காவல் படையின் அணிவகுப்பை வழி நடத்தி செல்கிறார்.

இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். மத்திய- மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும். மேலும் வெளிநாட்டு விருந்தினரை கவரும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்களும் இடம் பெறும்.  இதில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு தலைமையேற்று வழி நடத்திச் செல்லும் அதிகாரிகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. இந்த ஆண்டு இந்த பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் கமாண்டன்ட் அதிகாரி தேவிகா என்பவரும் பெறுகிறார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திகுட்பட்ட ஊத்துப்பாளையம் என்ற குட்கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் பத்மாவதி தம்பதியரின் மூத்த மகள் தேவிகா. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர். இவரது தங்கை ராதிகா தற்போது சட்டக்கல்வி படித்து வருகிறார். 28 வயது தேவிகா கடற்படை அதிகாரிகள் பயிற்சி மையம் மற்றும் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ‘எழிமலா’ கடற்படை பயிற்சி மையத்தில் 6 மாதம் பயிற்சி பெற்றவர். மேலும் கடற்படை பிரிவில் ஓராண்டு துணை பயிற்சியும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடலோர காவல் படையில் பணியில் சேர்ந்துள்ளார். தனது திறமையால் குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்ட இவர் அந்தமான் போர்ட் பிளேர் நகரில் உள்ள பிராந்திய கடலோர காவல் படையில் உதவித் தலைமை கமாண்டன்ட் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது உதவித் தலைமை கமாண்டன்ட் அதிகாரியாக குஜராத்தில் ஒகா நகரில் உள்ள மேற்கு கடலோர காவல் படையில் பணியாற்றி வருகிறார். பின்னர் சமூகசேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த பெண் போர்ட் பிளேரில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள கார் நிக்கோபார், காம்ப்பெல், கச்சல், கமோர்டா போன்ற இடங்களில் கிராமங்களில் வாழும் பெண் குழந்தைகளுக்கு கல்வி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் 71-வது குடியரசு தினவிழா அணிவகுப்பில், 120 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை இவர் தலைமை ஏற்று வழி நடத்தி செல்லவுள்ளார். தமிழகத்தில் இருந்து இச்சிறப்பை பெறும் முதல் பெண் அதிகாரி இவர்தான். மகளின் இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை தனது மகள் நிரூப்பித்து விட்டதாக கமாண்டண்ட் அதிகாரியின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்