அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு ! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகதொடங்கியுள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் முற்றிலும் விலகக்கூடும்.வடகிழக்கு பருவமழை தமிழக மற்றும் அதனைஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, உள் கர்நாடகா,ராயல்சீமா, கேரளா ஆகிய பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்தில் தொடங்கவுள்ளது .இதனையொட்டி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் மற்றும் வடஉள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
வரும் 17,18 தேதிகளில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லச்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரை சூரை காற்று வீசக்கூடும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவிலேயே இருக்கும் என்று தெரிவித்தார்.