அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு -தலைமைச் செயலாளர் புதிய மனு

அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் மனு அளித்துள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும்  நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ஆரம்ப கட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் அமைச்சரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால் இந்த வழக்கில் ,அமைச்சர் வேலுமணி மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கையையும், சாட்சிகளின் வாக்குமூலத்தையும் சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மனு அளித்துள்ளார்.அவரது மனுவில், அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என்றும் அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.