கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6,39,495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட கஜா புயல் குறித்த விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்பொழுது, கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கஜா புயல் பாதிப்பிற்கு தமிழக அரசு உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக குறிப்பிட்ட அவர், எந்த இயற்கை சீற்றத்திற்கும் வழங்கப்படாத அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 3 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

13 கடற்கரை மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடற்கரை பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கஜா புயல் பாதிப்பில் உயிரை பணயம் வைத்து செயல்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் 99 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெற்பயிர்கள் முதிர்ந்துள்ள நிலையில், வயல்களில் கம்பங்கள் நட தாமதம் ஆவதாக குறிப்பிட்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment