ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.’

ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கடந்த போட்டியில் இறங்கியது போலவே ரஹானேவும், ரவீந்திராவும் களமிறங்கினர். ரச்சின் ரவீந்திராவின் மோசமான ஃபார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. அவர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து 17 ரன்களுக்கு ருதுராஜ் கெய்வாட் நடையை கட்டினார்.

ஒரு புறம் ரஹானே சற்று பொறுமையாக விளையாட தொடங்கினார், இந்நிலையில் அதிரடி காட்டுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியின் ஆறுச்சாமி சிவம் துபே வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ஷமீர் ரிஸ்வியும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் சென்னை அணி 12.2 ஓவர்களில் 90-5 என தடுமாறியது. அவரை தொடர்ந்து களத்தில் ரவீந்திர ஜடேஜாவும், மொயின் அலியும் தட்டி தட்டி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயரத்தினர். இதனால் சென்னை அணி சரிவிலிருந்து சற்று மீண்டது. ஆனால் ஸ்கோர் இல்லாத காரணத்தால் டெத் ஓவர்களில் அடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் 18-வது ஓவரை வீசிய பிஷ்னாய் ஓவரை மொயின் அலி அதிரடியாக தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து பறக்க விட்டு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ‘தல’ தோனி களத்திற்குள் வந்தார். வழக்கம் போல அவரது அதிரடியை இந்த போட்டியிலும் காட்டினார். அவர் 9 பந்துக்கு 28 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி 40 பந்துக்கு 57 * ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சென்னை அணிக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவருக்கு  விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதனால் 177 என்ற இலக்கை அடைய லக்னோ அணி களமிறங்கியது. லக்னோ அணியில் தொடக்கத்தில் இருந்தே டிகாக்கும், கே.எல்.ராகுலும் அதிரடியாகவும், பொறுமையாகவும் ரன்களை குவித்து வந்தனர். லக்னோ அணியின் முதல் விக்கெட்டை எடுக்க சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளராகள் மிகவும் திணறினர்.

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், டிகாக் இருவரும் அரை சதம் கடந்து விளையாடினார்கள். சென்னை அணியும் என்ன முயற்சி செய்தாலும் அந்த முதல் விக்கெட் கிடைக்கவே இல்லை. இறுதியில் 15-வது ஓவரில் முஸ்தபிஸுர் ரஹ்மானின் பந்து வீச்சில் டிகாக் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் தங்களது முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்தனர்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கே.எல்.ராகுலுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார். நன்றாக விளையாடி கொண்டிருந்த கே.எல்.ராகுல் 82 ரன்களில் பத்திரனாவின் பந்தில் ஜடேஜாவின் அட்டகாசமான கேட்சில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.